திங்கள் காலை... அலுவலகம் செல்ல வேண்டி பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தேன். ஞாயிறின் சோம்பல் முறித்து மக்கள் கூட்டம் சாலையை ஆக்கிரமிக்கத் தொடங்கி இருந்தது. அப்போதுதான் அவளை கவனித்தேன். பேருந்து நிறுத்தத்தை நோக்கி விரைந்த நடையுடன் முன்னேறி வந்தாள். கடந்த ஒரு வாரமாகத்தான் அவளை இந்த சுற்று வட்டாரத்தில் காண்கிறேன். புதிதாக குடி பெயர்ந்து வந்திருப்பாள் என்று நினைக்கிறேன். ஆனால் எங்கு சென்றாலும் தன் தந்தையுடனே செல்கிறாள். இப்போதும் தந்தையுடனே வந்திருந்தாள்.
நீல வண்ணத்தில்பளிங்கு கண்கள், சிரிக்கையில் குழி விழும் கன்னங்கள், சுருள் சுருளான தலைமுடி, சொக்க வைக்கும் அழகுச் சிரிப்பு. பார்த்த உடனேயே பிடித்துப் போனது. கடந்து சென்ற அனைவரும் ஒரு வினாடியாவது அவளால் ஈர்க்கப்பட்டனர்.
அவளது பேருந்து வந்தது. கையசைத்து தந்தையிடமிருந்து விடை பெற்றாள். பேருந்தில் ஏறினாள் பையை சிரமத்துடன் சுமந்தபடி. ஆரம்ப பள்ளிகூட நிறுவனங்கள் மீது கோபம் வந்தது. பொதி சுமக்கும் பருவமா இது ?!!!